
எங்களைப் பற்றி & எழுத்து வழிகாட்டி
Learn how to write Tamil stories, novels and kavithai on Azhagiya Tamil: sign in, save a draft, add series chapters and submit for editor review. தமிழ் எழுத்து வழிகாட்டி.
நாங்கள் புத்தகங்களை வாசிக்க விரும்பும் நான்கு நண்பர்கள். வாசித்த புத்தகங்களைப் பற்றிப் பேசுவதோடு, எங்கள் எழுத்துகளையும் பகிர்ந்துகொள்ள ஓர் இடம் வேண்டும் என்று நினைத்தோம். அந்த எண்ணத்தில் உருவானதுதான் அழகிய தமிழ்.
வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் சிந்தனைகளையும், வாழ்க்கையின் அனுபவங்களையும் தமிழில் பகிர்ந்துகொள்ளும் இடமாக இதை வளர்க்க விரும்புகிறோம். எங்களைப் போல வாசிப்பையும் எழுத்தையும் விரும்பும் அனைவரையும் வரவேற்கிறோம். இது உங்கள் முதல் படைப்பாக இருந்தாலும் சரி; தொடர்ந்து எழுதுபவராக இருந்தாலும் சரி.
ஒவ்வொரு படைப்பையும் கவனமாக வாசிப்பதும், எழுத்தாளரின் குரலையும் உரிமையையும் மதிப்பதும், வாசகர்கள் மரியாதையுடன் உரையாட இடமளிப்பதும் எங்கள் நோக்கம். உங்கள் எழுத்து உங்கள் பெயரில் வெளியாகும்; பதிப்புரிமை உங்களிடமே இருக்கும்.
எழுத்து வழிகாட்டி
Write Tamil stories, novels and kavithai on Azhagiya Tamil.
புதிய படைப்பைத் தொடங்கும் முன், நாங்கள் எதை வரவேற்கிறோம் என்பதையும் உங்கள் படைப்பு எப்படி வெளியாகும் என்பதையும் இங்கே அறிந்துகொள்ளலாம்.
எந்தப் படைப்புகளை அனுப்பலாம்?
தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், சொந்த அனுபவங்கள், புத்தக விமர்சனங்கள், பயணப் பதிவுகள் ஆகியவற்றை வரவேற்கிறோம். தனிப் படைப்பாகவோ தொடராகவோ எழுதலாம். புத்தக விமர்சனத்தில் புத்தகத்தின் பெயரையும் எழுத்தாளரையும் குறிப்பிடுங்கள்; கதையின் முக்கிய முடிவுகளைப் பகிர்ந்தால் முன்கூட்டியே வாசகருக்குத் தெரிவியுங்கள்.
சொந்த எழுத்தும் மொழிபெயர்ப்பும்
உங்கள் சொந்த எழுத்தை அனுப்புங்கள். மற்றவர்களின் எழுத்தை நகலெடுத்தோ உங்கள் படைப்பாகக் காட்டியோ அனுப்ப வேண்டாம். ஏற்கெனவே வேறு இடத்தில் வெளியிட்ட உங்கள் படைப்பை அனுப்பினால், முதலில் வெளியான இடத்தையும் இணைப்பையும் குறிப்பிடுங்கள்; இங்கே வெளியிடுவதற்கான உரிமை உங்களிடம் இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்புகளைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். மூல எழுத்தாளர், படைப்பின் பெயர், மூல மொழி, கிடைத்தால் மூல இணைப்பு ஆகியவற்றுடன் மொழிபெயர்ப்பாளராக உங்கள் பெயரையும் சேருங்கள். உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்; அனுமதி தேவைப்படாத பொதுவுடைமைப் படைப்பாக இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள். மேற்கோள்களுக்கு மூலத்தைக் குறிப்பிடுங்கள். பயன்படுத்தும் படங்கள் உள்ளிட்ட பிறருடைய உள்ளடக்கத்திற்கும் தேவையான அனுமதியும் உரிய குறிப்பும் இருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு
எழுத்தாளரின் சொந்தச் சிந்தனையும் சொற்களும் கொண்ட படைப்புகளையே ஏற்கிறோம். முழுவதுமாகவோ பகுதியாகவோ AI உருவாக்கிய எழுத்தையும் AI செய்த மொழிபெயர்ப்பையும் படைப்பாக அனுப்ப வேண்டாம். உங்கள் சொந்த எழுத்தில் எழுத்துப்பிழைகளைச் சரிபார்க்க AI உதவியைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாற்றத்தையும் நீங்களே சரிபாருங்கள்; எழுத்தின் கருத்துக்கும் உண்மைத்தன்மைக்கும் நீங்கள் பொறுப்பு.
வரைவிலிருந்து வெளியீடு வரை
- Google மூலம் Login செய்து உங்கள் சுயவிவரப் பெயரைச் சரிபாருங்கள். எனது படைப்புகள் பக்கத்தில் புதிய படைப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து தலைப்பு, வகை, எழுத்து ஆகியவற்றைச் சேருங்கள்.
- Save draft மூலம் சேமித்து பின்னர் தொடரலாம். வரைவு பொதுவில் வெளியாகாது. தயாரானதும் Submit மூலம் மதிப்பாய்வுக்கு அனுப்புங்கள்.
- ஆசிரியர் குழு முதலில் வந்த வரிசையில் படைப்புகளை வாசித்து, தளத்திற்குப் பொருந்துகிறதா, உரிமையும் மேற்கோள்களும் சரியாக உள்ளனவா, எழுத்து தெளிவாக உள்ளதா என்று மதிப்பாய்வு செய்யும். அனுப்பியதும் தானாக வெளியாகாது; வெளியீடு உறுதி செய்யப்படுவதில்லை.
- படைப்பு ஏற்கப்படலாம், திருத்தம் கேட்கப்படலாம், அல்லது காரணத்துடன் நிராகரிக்கப்படலாம். சிறிய எழுத்துப்பிழைகளையும் வடிவமைப்பையும் ஆசிரியர்கள் சரிசெய்யலாம்; கருத்தை மாற்றும் பெரிய திருத்தங்களுக்கு உங்கள் ஒப்புதல் தேவை.
- எனது படைப்புகள் பக்கத்தில் நிலை, ஆசிரியரின் குறிப்பு, மதிப்பாய்வு வரலாறு ஆகியவற்றைப் பாருங்கள். திருத்தம் கேட்டால் Edit மூலம் மாற்றி மீண்டும் Submit செய்யலாம். மதிப்பாய்வில் இருக்கும் படைப்பை நேரடியாகத் திருத்த முடியாது.
நாவல் அல்லது தொடர்கதை எழுதுவது எப்படி?
நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனிப் பதிவாக எழுதுங்கள். தொடர் / இதழ் இணைப்பு பகுதியில், இந்தப் பதிவு ஒரு தொடரின் பகுதி என்பதைத் தேர்ந்தெடுங்கள். முதல் அத்தியாயத்தில் புதிய தொடரின் பெயரையும் பகுதி எண் 1 என்பதையும் சேருங்கள். அடுத்த அத்தியாயங்களில் அதே தொடரைத் தேர்ந்தெடுத்து அடுத்த பகுதி எண்ணைக் கொடுங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனியாக மதிப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும். வெளியான பகுதிகளை தொடர்கள் பக்கத்தில் வரிசையாக வாசிக்கலாம்.
கவிதையை எழுதிப் பகிர்வது எப்படி?
புதிய பதிவில் கவிதை வகையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் தலைப்பையும் சொந்தக் கவிதையையும் சேருங்கள். வரி இடைவெளிகளைச் சரிபார்த்து, முதலில் வரைவாகச் சேமிக்கலாம். தயாரானதும் மதிப்பாய்வுக்கு அனுப்புங்கள். ஏற்கப்பட்ட கவிதை உங்கள் பெயரில் தமிழ் கவிதைகள் பக்கத்தில் இடம்பெறும்.
மதிப்பாய்வுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
அனுப்பிய நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் மதிப்பாய்வு முடிவையோ திருத்தக் குறிப்பையோ வழங்க முயல்கிறோம். நண்பர்கள் தன்னார்வமாக நடத்தும் சிறிய குழு என்பதால், படைப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் நேரம் ஆகலாம். இது உறுதியான வெளியீட்டுத் தேதி அல்ல. இரண்டு வாரங்களுக்குப் பிறகும் தகவல் இல்லையெனில், படைப்பின் தலைப்பையும் அனுப்பிய தேதியையும் சேர்த்து contact.azhagiyatamil@gmail.com முகவரிக்கு எழுதுங்கள்.
வெளியான படைப்பில் திருத்தம் வேண்டுமா?
contact.azhagiyatamil@gmail.com முகவரிக்கு உங்கள் எழுத்தாளர் பெயர், வெளியான படைப்பின் இணைப்பு, மாற்ற வேண்டிய பகுதி, சரியான உரை அல்லது தகவல் ஆகியவற்றை அனுப்புங்கள். தேவையானால் ஆதார இணைப்பையும் சேருங்கள். ஆசிரியர் குழு உங்கள் கோரிக்கையைச் சரிபார்த்துப் படைப்பில் திருத்தம் செய்யும். வெளியான படைப்பை எழுத்தாளர் நேரடியாகத் திருத்த முடியாது; நீக்கக் கோரிக்கைக்கும் இதே முகவரியைப் பயன்படுத்தலாம்.
தொடர்கள், இதழ்கள், உரையாடல்கள்
- தொடராக எழுதும்போது ஒரே தொடரின் பெயரையும் ஒவ்வொரு பகுதியின் எண்ணையும் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பகுதியையும் தனியாக மதிப்பாய்வுக்கு அனுப்புங்கள்.
- வார, மாத இதழ்களுக்கு எழுதும்போதே வெளியீட்டு வகையையும் இதழின் தேதியையும் தேர்ந்தெடுக்கலாம். இதழ் தேர்வும் ஆசிரியர் மதிப்பாய்வுக்கு உட்பட்டதே.
- கருத்துகளில் படைப்பைப் பற்றிப் பேசுங்கள். தனிப்பட்ட தாக்குதல்கள், வெறுப்பு, விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பொருத்தமற்ற கருத்துகளைப் புகாரளிக்கலாம்.
படைப்புகளின் பதிப்புரிமை எழுத்தாளருக்கே சொந்தம். Submit செய்வது இந்தத் தளத்தில் மதிப்பாய்வு செய்து வெளியிட அனுமதி அளிப்பதாகும். அச்சு வெளியீட்டிற்கும் பிற தளங்களில் மறுபதிப்பிற்கும் தனி அனுமதி தேவை. முழு விவரங்களுக்கு Terms of Service மற்றும் Privacy Policy பக்கங்களைப் படியுங்கள்.