அழகிய தமிழ்

மாயநதி

ஒரு மத்தியான வேளை. உணவு இடைவெளிக்குப் பிறகு சற்று மந்தமாக நகர்வதாக தெரிந்தது. ரிஷப்ஷனில், அழுக்கடைந்த தோற்றத்தில் ஒருவர்

வந்து நின்றார். பரபரப்பாக எதோ விசாரித்தார். ரிஷப்ஷனிஷ்ட் கவிதா, அவரை வெளியேற்ற முயன்றுக்கொண்டிருந்தாள்.


சிசிடிவியில் பார்த்த மித்ரா, “கவிதா… அவர உள்ள அனுப்புங்க” என்று இண்டர்காமில் உத்தரவிட்டாள். கேபினுக்குள் வந்தவரை எதிரே உட்கார வைத்து தண்ணீரை குடிக்கக் கொடுத்தாள். மனிதர் கோபத்தில் ‘புஸ் புஸ்…’ என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தார்.


தண்ணீரை குடித்துவிட்டு, தன் பையில் இருந்த சிறு கல்லை எடுத்து மேஜை மீது வைத்தார். “மேடம் நான் சொல்றது சத்தியம்; இத நம்புங்க” என்றார்.


“என்னங்க இது?”


“இது எங்க குடும்ப சொத்துங்க, எங்க முப்பாட்டன் காலத்திலிருந்து மூங்கில் பெட்டியில் வச்சு கும்பிட்டு வரோம். சக்தி வாய்ந்த சாமிங்க. கொஞ்ச நாள் முன்னாலே ஒரு அம்மாவசை பூஜைக்கு சுத்தம் செய்யறப்போ தங்கம் மாதிரி கல்லுங்க கொட்டுச்சி. அத உரசி பாத்ததுல தங்கம்ன்னு உறுதியாகிடுச்சி. அப்புறம் இன்னொரு நாள் எடுத்து உரசி பாத்தேன். அப்படி எந்த தங்கமும் வரல விசாரிச்சு பார்த்தோம், உங்க ஆபீஸ்ல குடுத்தா, என்னனு பாத்து சொல்லுவீங்கன்னு சொன்னாங்க. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க மேடம்” என்று கெஞ்சினார்.


“நெறைய செலவாகுமே சார்...” என்றாள்.


“அதெல்லாம் யோசிக்காதீங்க மேடம். பணம் எத்தனை வேண்டுமானாலும் கொடுக்கிறேன்” என்றார்.


விலை உயர்ந்த கருவிகளை வாங்கி வைத்து, எதையும் ஆராய்ந்து விளக்கம் கொடுப்போம் என்ற நம்பிக்கையில் அவர்கள் நிறுவிய ஆய்வுக்கூடத்திற்கு வருவதெல்லாம், கிணற்று நீரை குடிக்கலாமா? வீடு கட்ட வாங்கியது கிரானைட் கல்தானா? மண் விவசாயத்துக்கு உதவுமா? நெல்லு போட்டா நல்ல லாபம் கெடைக்குமா? போலி நகையா என்று சின்ன சின்ன விஷயங்களே..! இதைத்தாண்டி ஒன்றிரண்டு வெளிநாட்டு பொருட்களும் ஆய்விற்கு வரும். ஆனால் அவை அடிக்கடி வருவதில்லையே.


சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் கும்பல் ஒன்று, அம்மனின் சூலாயுதம் எதில் செய்யப்பட்டது என கேட்டு வந்தது. அந்த விவகாரம் பெரிதாக வெடிக்கவே, மித்ராவின் ஆய்வகம் பிரபலமானது. விளைவாக இதோ இன்னொரு ஆர்டர் வந்திருக்கிறது.


செம்பழுப்பு நிறத்தில் கரடு முரடாக எதிரில் இருந்த கல்லை பார்க்கும்போது மித்ராவின் மூளையில், ஆர்வம் அதிகரித்தது. மித்ராவின் பார்வை அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


“இது எங்க வீட்டு சொத்துன்னு காட்ட நிறைய ஆதாரம் இருக்கு, ஏமாத்தணும் நினைக்காதீங்க” என்று மிரட்டினார்.


“அதெல்லாம் ஒன்னும் பயப்படாதீங்க” எனக்கூறி, அவரை காத்திருக்கச் சொல்லிவிட்டு ஆய்வுக்கூடத்துக்குள் எடுத்துச் சென்றாள்.


முதல் சோதனையிலேயே அது புவியில் உள்ள எந்த தனிமத்துக்கும் இல்லாத பண்பு கொண்டது என்பதை உறுதி செய்தாள். வானில் இருந்து பூமியை தாக்கிய ஏராளமான எரிகல்லில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தாள்.


ஆச்சர்யம்..! அதிசயம்..! பரவசம்..! கிட்டத்தட்ட ஐம்பது வருடமாக டெலிபோர்டிங் ஆராய்ச்சியில் தொய்வடைந்து நிற்கும் மித்ரா குடும்பத்துக்கு, முக்கிய தேவை இந்த கல் என்பது நான்காம் கட்ட ஆய்வில் தெரியவந்தது. ஆனால், இதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று சோதிப்பதற்குள் கையிருப்பு மொத்தமும் காலியாகிவிடும்.


வரலாற்றை தெரிந்துகொள்வோம் என வெளியே வந்து அவரிடம் பேச்சு கொடுத்தாள் மித்ரா,


“வீட்டுல ரொம்ப கஷ்டம், எங்கப்பனோட தாத்தனுக்கு 7 தங்கச்சிங்க. அதுல நாலாவது தங்கச்சிக்கு ஒரு நாள் பிரசவ வலி. ராத்திரி நேரம் பிரசவம் பாத்திட்டிருந்தப்ப… வெளிய ஒரு சத்தம். ஊரே அதிர்ந்த மாதிரி இருந்துச்சாம்...வெளியே என்னன்னு எட்டிப்பார்க்க கதவை திறந்தப்போ ஒரு கல் பறந்து வந்து வீட்டு மண் சுவரில் இடித்து விழ சுவருக்குள் இருந்து காசு கொட்டுச்சாம்… எங்கப்பா இந்த கதைய சொன்னாருங்க” என்றார்.


“சரி அதுக்கப்புறம்?” என்று ஆர்வமானாள் மித்ரா.


“அதோட எங்க குடும்பத்த பிடிச்ச பீட ஒழிஞ்சது. எங்க குடும்பத்துக்கு கஷ்டம்னா என்னனே தெரியாம மூனு தலைமுறையா வாழ்ந்துட்டிருக்கோம். நாங்க கேக்குறதெல்லாம் எங்க சாமி குடுத்துடும்” என்றார்.


“உங்கள பாத்தா அப்டி தெரியலயே?”


“பணம் இருக்குங்குறதுக்காக இந்த வெயில்ல கோட்டு ஷூட்டு போட்டுக்கிட்டா அலைய முடியும்?” என்றார்.


அவர்களுக்கு இந்த கல், கல் இல்லை. தெய்வம். இதை விட்டுக்கொடுக்க அவர்கள் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இதன் மகிமை கடவுளுக்கு அப்பால் அல்லவா..? மனித இனத்தின் உச்சாணி கொம்பு முன்னேற்றத்திற்கு பயன்படுமே..!


இந்த உலக பந்தின் வயது பத்து பில்லியன் ஆண்டுகள்; அதில் மனித இனத்தின் வயது ஐந்து மில்லியன் ஆண்டுகள் என்று அறிவியல் கணக்கிட்டு சொல்கிறது. இருண்ட ரகசியங்களை இந்த நொடி வரை மனிதன் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கிறான்; தெளிவடைகிறான். ஆழ்கடலையும், கண்ணுக்குத் தெரிந்தும் தொட முடியாத வானத்தையும் இன்னும் மனிதன் முழுமையாக அறியவில்லை.


ஓர் பறவை பறந்த வழித்தடத்தில் அதன் சிறகுகள் விழுகிறது. மயில் சென்ற பாதையில் அதன் இறகுகள் விழுவது இயற்கைதானே? இந்த இறகுகளும் சிறகுகளும் அதன் தடத்தை நமக்கு காட்டிக்கொடுக்கிறதுதானே? அதுபோல காலத்தின் ஓட்டத்தில் மனிதனிடமிருந்து, வெளியேறும் ரசாயன கலவைகளில் உள்ள கார்பன் தடங்களாக நிற்கும். அப்படியான தடங்களை வைத்து, அந்நேரம் அந்த குறிப்பிட்ட மனிதனின் இதய துடிப்பு, ரத்த ஓட்டம், எண்ணம், செயல் உணர்வுகளை துல்லியமாக கண்டறிந்து அவற்றை சிக்னலாக மாற்றி, அதன் மூலம் அந்த கால நொடியை மனிதன் அந்த இடத்துக்கே திரும்ப சென்று பார்க்க முடியும். கிட்டத்தட்ட டைம் ட்ராவல்தான்.


இதற்கு டெலிபோர்ட்டிங் சாதனம் கண்டுபிடிப்பதே மித்ரா குடும்பத்தின் கனவாக இருந்தது. தாத்தா போட்ட விதை. அவர் ஏதேதோ முயற்சித்தார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு பிற தொழில்நுட்பங்கள் வளராததால், முதல் அடியையே முழுமையாக எடுத்து வைக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்த மித்ராவின் அப்பாவும், ஓரளவுக்கு தெளிவான பாதையை வகுத்தார். இந்த இருவரின் முயற்சியும் மித்ராவின் ஆய்வை எளிதாக்கியது.


“நாம் அனைவரும் இரசாயன கலவைகளே..! வெவ்வேறு அளவுகளில் கலந்த ரசாயன மாற்றங்களுக்கு ஏற்ப முழு உருவமாக மாறிய அதிசயங்கள். கார்பன் அணுக்களை வெளியிட்டு தடங்களை உருவாக்குகிறோம். அப்படியான கார்பன் தடங்களை காலத்தின் ஓட்டத்தில், மிகச்சரியாக பிடித்தால் நம்மால் திரும்பவும் அந்த நொடியை சென்று பார்க்க முடியும்” எனக் கூறி, ஆய்வுக்கு அச்சாரம் போட்ட தாத்தாவிற்கு அநேக கோடி நமஸ்காரம் போட வேண்டிய கடமை மித்ராவுக்கு மட்டுமல்ல..! அறிவியல் உலகம் அவரை “கிறுக்கு” என்றழைத்தபோதும் ஆதாரபூர்வமான தகவல்களை மகனுக்கு விட்டு சென்றார். மகனும் அவர் மகளுக்கு டெல்போர்ட் வடிவமைப்பு வரை பாதை வகுத்துக்கொடுத்தார்.


இது மித்ராவின் ஆய்வுக்கு பெரிதும் உந்துதலாக இருந்தது. அப்பாவும் தாத்தாவும் ஏறத்தாழ ஆய்வை முடித்துவிட்டார்கள். செயல் வடிவம் கொடுத்தால் போதும் என நினைத்தாள். ஆனால், அதற்கு தேவையான பணம் மலைக்க வைத்தது.


“உனக்கு ஒன்னு நல்லா தெரியும்னா அத சும்மா பண்ணி குடுக்காத” என்று அவள் ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார். அதற்கேற்ப ஆய்வகத்தை நிறுவி அதிலிருந்து பணம் ஈட்டி வருகிறாள் மித்ரா. முறையான அலுவலகம், அனைத்துக்குமான ஆய்வுக்கூடம், என சிறு இஸ்ரோவையே உருவாக்கியிருந்தாள். ராக்கெட் வரை தயாரிக்க முடியும்.ஆனால் அவள் தேவை அது இல்லையே.


இருந்த தகவல்களை வைத்து டெலிபோர்ட்டரின் வடிவத்தை உறுதி செய்தாள். அதை உருவாக்க வேண்டும். அதற்கு ஏற்ற பொருளை தேர்வு செய்ய வேண்டும். அவற்றை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்ததும்தான் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும். ஆனால், இதற்கு கிலோ கணக்கில் தங்கம் தேவைப்பட்டது. அதை உருக்குவதற்கான வசதி, மித்ராவிடம் இருக்கிறது. ஆனால் வாங்குவதற்கான பணம் தடையாக துரத்தியது. இந்த அச்சத்துக்கெல்லாம் இந்த கல் தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.


இது சாத்தியப்பட்டால், தடயவியல் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். குற்றங்கள் நடப்பதை தடுக்கும். மனித வாழ்வின் ஆயுளை நீட்டிக்கவும் இது உதவும். எந்த கண்டுபிடிப்பின் பயனும் அது பயன்பாட்டிற்கு வந்த பின் அல்லவா நம்பத்தகுந்தாக பார்க்கப்படுகிறது.


இந்த கல் மித்ராவைப் பொருத்தவரை நம்பிக்கைக் கல். அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு உட்படுத்தினாள். அதன் மூலக்கூறுகளை குறுக்கு நெடுக்காக ஆராய வேண்டும்.


‘இயற்கை, மனிதனுடன் கண்ணாமூச்சி ஆடுவதில் ஆர்வம் நிறைந்தது. ஒரு கண்டுபிடிப்பிற்கு இடம் கொடுக்கிறதென்றால் இன்னொரு பெரிய ரகசியத்தை மறைகிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும்’ என்று அவள் தாத்தா தனது குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். விஞ்ஞானம் என்பது இயற்கையுடன் மனிதன் ஆடும் ஆடுபுலி ஆட்டம். அதில், விதிளை இயறக்கை அன்னையே நிர்ணயம் செய்கிறாள். இறுதியில் அவளே வெற்றியும் காண்கிறாள். தாத்தாவின் இந்த அனுபவக் குறிப்பை அவளும் ஒத்துக்கொள்கிறாள். அவளுக்கும் அப்படியான அனுபவம்தானே இதுவரை கிடைத்துள்ளது.


மனிதனுக்கு உணர்வுகள் என்பது மகிழ்ச்சி, கோபம், ஏக்கம், ரசனை, குரோதம், பயம் வெறுப்பு. இவ்வுணர்வுகளில் அவன் உடல் இராசயன கலவைகள் மாறுபட்டு அவன் உடலில் இருந்து வெளியேறும் வாயு அவற்றை காற்றில் கலக்க விடுகிறது. அந்த உணர்வு வெளிப்பாடுகளுடன் இந்த கல் எதிர்வினை ஆகிறதே, அப்போது இவளுக்கு தகுந்த மீடியம் இந்த கல்தான். இது சிறந்த டெலிபோர்ட்டிங் மீடியம் என்பதை உறுதி செய்துவிட்டாள். ஆனால், இது சிறிய கல். இதனுடன் வந்த பெரிய துண்டு அவர் ஊரைச் சுற்றி எங்கேயோ இருக்கிறது என்பது மித்ராவுக்கு புலப்பட்டது.


“ஹுர்ரே..! இரண்டு தலைமுறை முயற்சி, மூன்றாம் தலைமுறையில் வெற்றியடைய போகிறது. யார் பெயர் வைக்கலாம்..?” என்று யோசித்த மித்ராவுக்கு, அவள் பெயரே ஏற்புடையதாக இருந்தது.


எரிக்கல்லின் கூட்டு கலவைகளை துல்லியமாக கண்டுபிடித்தவள், பைலட் ஸ்கேல் டெலிபோர்ட் சாதனம் வடிவமைத்தாள். காலம் போனது,பெரிய துண்டை தேடுதலில் ஒரு முன்னேற்றமும் இல்லை.


‘அதான் கருவி இருக்கிறதே’ உற்சாகம் பொங்க, கார்பன் ட்ரேஸ் முறை மூலம் டெலிபோர்டிங் சாதனத்தை வைத்துக்கொண்டு தேடத்தொடங்கினாள். இடம் தெரிந்தது. மூன்று தலைமுறைகளுக்கு முன் பயணமானாள். அவள் நின்ற இடத்தின் அருகே பிரசவவலியுடன் ஒரு பெண் அலறிக்கொண்டிருந்தாள்.


திடீரென இரவு பகலானது போல் வெளிச்சம். வானில் இருந்து பெரிய சூரியன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது. நகர வேண்டும் என நினைப்பதற்குள், அவள் மேலேயே அந்த கல் விழுந்தது. மித்ரா பஸ்பம் ஆனாள்.


இயற்கை அன்னை அவள் ஆடும் ஆட்டத்தில் வேற யாரால் ஜெயிக்க முடியும்..!!