அழகிய தமிழ்

வல்லினம் சிறுகதைப் பட்டறை (sample)



அன்புள்ள K,


“அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன” – என்பது உங்கள் சொற்களில் எனக்கு மிக விருப்பமான ஒன்று. செயலே யோகம், வினையே உயிர் எனத் தங்கள் தொடர் செயல்பாடுகளால் தாங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் துறையிலும், தங்கள் சுற்றத்திலும் சமூகத்திலும் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கும் லட்சிய பிம்பங்கள் எப்போதும் பிரமிப்பையும் மதிப்பையும் உருவாக்குகின்றனர். அந்த வகையில் மலேசிய எழுத்தாளர் ம.நவீன் அவர்கள் தனது பதின்பருவம் தொட்டு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியத் தளத்தில் இயங்கி வருகிறார். ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி, வல்லினம் இதழ், பதிப்பகம், கலைக்களஞ்சியங்கள், ஆவணப்படங்கள் எனப் பல தளங்களிலும் தொடர்ந்து செயலாற்றி மலேசியாவின் இலக்கிய முகத்தையே மாற்றியமைத்திருக்கிறார்.


எந்த மனிதனின் கண்ணீரும் தன் கண்ணீர்தான் என நாவல்கள் எழுதுவதன் வழியாக ஆழுள்ளத்தில் அறிந்ததாகக் குறிப்பிடும் நவீன், தமிழ் எழுத்தாளர்கள் எந்த நாட்டில் சிரமப்பட்டாலும் அந்தக் கண்ணீரைத் துடைக்கத் தங்கள் மண்ணிலிருந்து ஒரு கை எழ வேண்டுமென்ற உன்னத நோக்கத்திற்காக வல்லினம் அறவாரியம் ஒன்றைத் துவங்கியிருக்கிறார். ”இந்த உலகில் தண்ணீர் தீர்ந்து, மனிதன் பஞ்சத்தில் வாடும் ஒரு காலம் வரும் என எனக்குத் தோன்றுவதுண்டு. அப்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன். ஆனால் அப்போது தாகத்தால் அழும் உயிராக இருப்பதும் நான்தான் என எழும் எண்ணம் மன நிம்மதியைக் கெடுக்கிறது” என இலக்கியத்தின் மூலம் கனிவெனும் உச்சத்திற்கு செல்லும் அவரது பயணம் பெரும் பிரமிப்பை உருவாக்குகிறது.


வல்லினம் அறவாரியத்திற்கான நிதி திரட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாகச் சென்ற வாரம், சிறுகதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை எழுத்தாளர் ம.நவீன் நடத்தினார். செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களில், நாளொன்றுக்கு 4 மணி நேரம் என இணையவழிச் சந்திப்பாக நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்பில் அமெரிக்காவின் மேற்குக் கரையிலிருந்து கிழக்குக்கரை வரையான முக்கிய நகரங்களில் இருந்து முப்பதிற்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். வாசிப்பின் பல்வேறு படிநிலைகளில் இருக்கும் நண்பர்களில் இருந்து கதைகள் எழுதிப் பிரசுரமான எழுத்தாளர்களான நண்பர்கள் வரை அனைவருக்குமான மிகப்பயனுள்ள வகுப்பாக இது அமைந்தது.


முதல்நாள் வகுப்பு சிறுகதை வாசிப்பு குறித்தானது. எழுத்தாளர் நவீன் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் எழுதிய பதிமூன்று சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, எங்கள் வாசிப்புப் பயிற்சிக்காக முன்னதாகவே அளித்திருந்தார். ஒவ்வொரு கதைக்கும் இரண்டு அல்லது மூன்று நபர்கள் எனத் தங்கள் வாசிப்பையும் புரிதலையும் நண்பர்கள் முன்வைக்க, அந்தக் கதை குறித்த தனது பார்வையையும், ஒரு நல்ல இலக்கிய வாசகன் ஒரு சிறுகதையில் கவனிக்க வேண்டிய இடங்கள் என்ன என்பதையும் நவீன் எங்களுக்கு விளக்கினார். கதை ஒரு பச்சைக்குழந்தையென உங்கள் முன் சிரித்துக்கொண்டு காத்திருக்கிறது; நீங்கள் செய்ய வேண்டியெதெல்லாம் அதை உணர்வுப்பூர்வமாக எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்வது மட்டுமே என நவீன் கூறியது மிகப்பெரிய திறப்பாக இருந்தது.


இரண்டாம் நாள் சிறுகதை எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு. சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தொடக்க கட்ட எழுத்தாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைகளையும், விதிகளை மீறி எழுதுவதற்கு முன்பாக அந்த விதிகளைக் கற்று அதன்படி எழுதிப் பயிற்சிபெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நவீன் மிகச்சிறப்பாக விளக்கினார். பயிற்சி வகுப்பும் அதன் பின் நவீனுடனான கேள்வி பதில் நேரமும் எங்களது பல வினாக்களுக்கு விடை அளிப்பதாக இருந்தது.


இறுதிப்பகுதியில் வல்லினம் சார்பில் இதுவரையில் அவர்கள் மலேசியாவில் ஆற்றிவந்துள்ள பணிகள் குறித்தும், இப்போது வல்லினம் அறவாரியம் அமைப்பதற்கான தேவை குறித்தும் நவீன் ஆற்றிய உரை மிகுந்த எழுச்சியூட்டுவதாக இருந்தது. இந்தப்பணியில் அவரோடு ஒரு சிறு அளவிலேனும் எங்களாலும் பங்கேற்க முடிவது அனைவருக்கும் மிகுந்த நிறைவளித்தது.


இந்த சிறப்பான பயிற்சிப் பட்டறையை எழுத்தாளரும் நண்பருமான மலர்விழி மணியம் பெருமுயற்சி எடுத்து ஏற்பாடு செய்திருந்தார். சான் பிரான்சிஸ்கோ நண்பர் பாலாஜி பல்வேறு நண்பர்களை ஒருங்கிணைத்து நிகழ்வுக்குப் பக்கபலமாக இருந்தார். இந்த இருநாள் பயிற்சிப் பட்டறையை நான் தொகுத்து வழங்கினேன். நண்பர்கள் அன்னபூர்ணாவும், ஜமீலாவும் தங்கள் இனிய குரலால் இசையோடு இந்த நிகழ்வைத் துவக்கி வைத்தார்கள். எங்களுக்காக இந்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறையை நடத்திக்கொடுத்த எழுத்தாளர் ம.நவீன் அவர்களுக்கும், இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள் பல.

சாரதி

சான் பிரான்சிஸ்கோ